தமிழகம்

காமன்வெல்த் மாநாடு: பிரதமரிடம் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே. வாசன் நேரில் வலியுறுத்தினார்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி இந்தியா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் நிலை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சினைகளை எடுத்துரைக்கவும் பிரதமரை அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை வாசன் சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நடந்தது.

அந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் வாசன் கூறுகையில், "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் நடந்து வரும் பல போராட்டங்கள் குறித்தும், அது பற்றிய தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது பற்றியும் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். இதை மிக உன்னிப்பாகவும், கவனமாகவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சினையில் நன்கு ஆலோசித்து முடிவு எடுப்பதாகக் கூறிய பிரதமர், மீனவர் பிரச்சனைகளை தீர்ப்பது பற்றியும் விரைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறினார். காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என பிரதமர் கூறினார்" என்றார் வாசன்.

SCROLL FOR NEXT