தமிழகம்

மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் எவை? - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்கிறார்

செய்திப்பிரிவு

முதல்வர் உத்தரவின்படி, 500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுவது குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக வெற்றி பெற்று 6-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை 2 மணி நேரம் குறைத்து (காலை 10 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு திறக்கப்படும்) உத்தரவிட்டார். மேலும், முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்தார்.

இதன்படி, மூடப்பட வேண்டிய மதுக்கடைகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் டாஸ்மாக் மண்டல, மாவட்ட மேலாளர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பான பட்டியல், மாவட்ட ஆட்சியர்களிடம் கடந்த வாரம் அளிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் டாஸ்மாக் தலைமையகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சுமார் 1,000 கடைகளைக் கொண்ட அந்த உத்தேச பட்டியலில் இருந்து 500 கடைகள் மூடப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை வரும் 16-ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT