பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 10-ம் தேதி நடக்கவுள்ள பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார்.
சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி உள்ளது. ராணுவ அதிகாரி களுக்கான போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு இங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பணியில் சேர்க்கப்படுகின்றனர். இங்கு தற்போது பயிற்சி பெறும் இளம் அதிகாரிகள் தங்கள் பயிற்சியை வரும் செப்டம்பர் 10-ம் தேதி நிறைவு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். .
இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், 2009-ல் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஆகியோர் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவரின் வருகையை யொட்டி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய வளாகத்தில் பாது காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி
இதுகுறித்து ராணுவ பயிற்சி மைய உயர் அதிகாரிகள் கூறியதாவது: நாட்டிலேயே சென்னை பயிற்சி மையத்தில் மட்டும்தான் பெண் அதிகாரி களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு 33 பெண்கள் உட்பட மொத்தம் 272 பேர் தங்கள் பயிற்சியை செப்டம்பர் 10-ம் தேதி நிறைவு செய்கின்றனர். இதில் 19 பேர் ஆப்கானிஸ்தான், பூடான், ஃபிஜி, பப்புவா நியூகினி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உடற்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, உளவியல் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. இதில், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், துப்பாக்கி சுடுதலில் (ஸ்கீட் பிரிவு) உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.