தமிழகம்

பால் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும்: பொதுமக்கள் கடும் அதிருப்தி

செய்திப்பிரிவு

ஆவின் பாலின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

ஜெயக்குமார் (டீ கடைக்காரர், சென்னை):

தற்போது ஒரு டீ ரூ.7-க்கு விற்கப்படுகிறது. பால் விலை உயர்த்தப்பட்டால் ரூ.10 வரை விலையை உயர்த்துவோம். இதனால் எங்கள் வாடிக்கையாளர்கள் அதிருப்திக்கு உள்ளாவார்கள். எங்கள் வியாபாரம் பாதிக்கும். இதை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியவில்லை. அதனால் பால் விற்பனை விலை உயர்வை அரசு திரும்பப் பெறவேண்டும்.

முத்து (மீன்பாடி வண்டி ஓட்டுநர், சென்னை):

எங்கள் தொழிலில் நேரத்துக்கு சாப்பிட முடியாது. டீதான் எங்கள் உணவு. நாள் ஒன்றுக்கு 10 டீ சாப்பிடுவேன். பால் விலை உயர்ந்துள்ளதால் டீ விலை உயரும். இது எங்களை பாதிக்கும்.

பாஸ்கரன் (ஆட்டோ ஓட்டுநர், சென்னை):

டீ விலை உயரும்போது எங்களைப் போன்றோர் டீ குடிப்பதை குறைத்துக்கொள்வோம். இந்த விலை உயர்வு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சாரதா, கடலூர்:

லிட்டருக்கு ரூ.10 உயர்வு என்பது நடுத்தர குடும்பத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும், தினமும் ஒரு லிட்டர் வாங்குவோருக்கு மாதத்துக்கு ரூ.310 வரை கூடுதல் செலவாகிறது. அத்தியாவசியத் தேவைப் பொருளை உயர்த்துவதற்கு முன் அரசு பலமுறை யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

அல்லி, நெய்வேலி:

கலப்படம் என செய்திகள் வந்ததாலும், பலர் இன்னும் ஆவின் பாலை பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் பால் விலை உயர்வு ஆவின் நிறுவனத்துக்கு பாதகத்தை உருவாக்கும்.

கே.பி.முகமது அலி, பொள்ளாச்சி:

பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினால், மொத்தமாக பால் கொள்முதல் விலை கூடும். டீ, காபி விலை உயரும். பேக்கரி உரிமையாளர்களுக்கான அமைப்புகள் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்.

எஸ்.பி.சுகுமாறன், மதுரை நகர் டீ, காபி வர்த்தகர் சங்க கவுரவ செயலர்:

ஆவின் விலை உயர்வால் தனியார் பால் விலையும் லிட்டர் ரூ.50 வரை விற்கப்படலாம். இதனால் ஒரு டீ அல்லது காபி எதுவானாலும் குறைந்தது ரூ.2 அதிகரிக்கும். ஏற்கெனவே டீத்தூள், காபித்தூள் விலைகள் கடந்த 4 மாதங்களில் கிலோவுக்கு ரூ.60 வரை உயர்ந்துள்ளன. இனிமேல் டீ, காபி விலை ரூ.10, 15, 20 என்ற அளவில் கடைகளின் தரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.

குறிச்சி கணேசன், திருநெல்வேலி :

பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது கால்நடை வளர்ப்போருக்கு ஆறுதல் அளிக்கும். அதேநேரத்தில் சாதாரண மக்களுக்கு இந்த விலை உயர்வு சுமைதான்.

எம்.முருகன், ஓட்டல் உரிமையாளர், நாகர்கோவில்:

தீபாவளியின் போது டீ விலையை 2 ரூபாய் உயர்த்தி, 7 ரூபாய் ஆக்கினேன். இப்போ பால் விலை கூடியிருப்பதால இன்னும் 2 ரூபாய் ஏத்தியே ஆகணும். எங்க பகுதி கடைகளில் தோசை விலையே 8 ரூபாய் தான். டீ குடிக்க வர்றவங்க இனி வயிறு நிறைய சாப்பிட்டுட்டே போயிடலாம்னு நினைப்பாங்க.

கந்தசாமி, கோவை விவசாயிகள் சங்கச் செயலர்:

கேரளாவில் ஒரு லிட்டர் பால் ரூ.30-க்கு அரசு வாங்கி பொதுமக்களுக்கு ரூ.36-க்கு விற்கிறது. ஆனால், தமிழகத்தில் லிட்டர் பால் ரூ.22 முதல் ரூ.22.50 வரை விலைக்கு வாங்கி மக்களுக்கு ரூ.34-க்கு விற்கப்படுகிறது. ஆவின் பாலில் ஊழல்களை களையாத வரை பால் விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு பயன் இல்லை.

SCROLL FOR NEXT