வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நாளை (செப்.1) தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் படுவதுடன், செப்டம்பர் 11 மற்றும் 25 தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
வாக்காளர் அட்டை வைத்திருந் தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியாது. வாக்காளர் குடியிருக்கும் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். இதற்காகவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வரைவு பட்டியல்
இப்பணியை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் நாளை செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்பட்டி யலை ‘www.elections.tn.gov.in’ -ல் பார்க்கலாம். செப்டம்பர் 10 மற்றும் 24 ஆகிய நாட்களில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க கட்டிடங்களில், வாக்காளர் பட்டியல் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.
மேலும் வருவாய் கோட்டாட் சியர், நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளிலும் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். சென்னை நகரில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்படும். இதுதவிர ‘electoralservicessearch.azurewebsites.net’ என்ற இணைய தள முகவரியிலும் பெயரை தேடி கண்டுபிடிக்க வசதி செய்யப்பட்டுள் ளது.
வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிரம்பியவராக, அதாவது 1999 டிசம்பர் 31 அன்றோ, முன்போ பிறந்தவராக இருக்கும் பட்சத்தில், வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்யலாம். பதிவு செய்யக் கோரும் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய நாளை முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை மனுக்களை அளிக்கலாம். திருத்தப்பணிகள் தொடர்பாக செப்டம்பர் 11 மற்றும் 25 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பெயர் சேர்க்க வேண்டும் எனில், வேறு எங்கும் பதியாமல் இருந்தாலோ, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தாலோ, படிவம் எண் 6 அளிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகன் பெயர் சேர்க்க படிவம் 6ஏ அளிக்க வேண்டும். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்குள் வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகியவற்றில் திருத்தம், சரியான உருவப்படம் பதிவு செய்ய படிவம் 8 அளிக்க வேண்டும். படிவங்களை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்று நேரில் விண்ணப்பிக்கலாம். அல்லது தேர்தல்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
முதல்முறையாக விண்ணப்பிப் போரைத் தவிர மற்றவர்கள் முந்தைய முகவரி, புகைப்பட அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். ஒருவருக்கு ஒரு முறை வழங்கப்பட்ட அடையாள அட்டை அந்த நபர் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு வசிப்பிடத்தை மாற்றினால், நாடு முழுவதும் செல்லுபடியாகும்.
வயது சான்றாக பிறப்புச் சான்று, பள்ளிச்சான்று அல்லது பாஸ்போர்ட்டின் நகல் அளிக்கப்படலாம். வசிப்பிடச் சான்றாக வங்கி, கிசான், அஞ்சல் நடப்பு கணக்கு கையேடு, உணவுப் பொருள் பங்கீட்டு அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமானவரி விதிப்பு ஆணை, குடிநீர், தொலைபேசி மின்சாரம் சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றின் சமீபத்திய ரசீது, தபால்துறை தபால்கள், வாடகை ஒப்பந்தம், ஆதார் கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
வெளிநாடு வாழ் வாக்காளர்கள், தபாலில் வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பத்தை அளிக்கலாம். விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் நகல், விசா செல்திறன் அனுப்ப வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன், அதில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுகளுக்கு சென்று விசாரிப்பார். கோரிக்கைகள் மற்றும் மறுப்பு தொடர்பான பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் வெளியிடப்படும்.ஆட்சேபணை இருந்தால் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.