நீட் தேர்வின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகக் கூறி சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மே 7-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நடத்திய மத்திய பள்ளிக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
சில இடங்களில் மாணவ மாணவிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டனர். முழுக்கை சட்டைகள், குர்தாக்கள் கிழிக்கப்பட்டன. தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஆபரணங்கள் அணியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியரம் மையத்தில் தேர்வு எழுத வந்த ஒரு மாணவியிடம் மேல் உள்ளாடையை கழட்டுமாறு தேர்வு கூட கண்காணிப்பாளர் கூறியுள்ளார். அம்மாணவி தனது உள்ளாடயை தனது தாயாரிடத்தில் கொடுத்த பிறகே அவரை தேர்வு எழுத கண்காணிப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏராளமானோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு முன் அனுமதி வாங்காததால், மாணவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.