கோவையில் 3 மணி நேரத்துக்குள் 4 பேரைக் கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசியைச் செலுத்திப் பிடித்தனர். கும்கி யானை மூலம் ஒற்றை யானையை கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டுசெல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை, மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக காட்டு யானை ஒன்று வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தியது. நேற்று இரவு போத்தனூர் கணேஷபுரம் பகுதியில் அந்த யானை நுழைந்தது. அங்கு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமார் மற்றும் அவரின் மகள் காயத்ரியை (12) தாக்கியது. இதில் சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறிது நேரத்தில் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை, அங்கு இயற்கை உபாதை கழிக்க வந்த நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை எதிர்கொண்டு தாக்கியது. கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.
நீர் பாய்ச்ச வந்தரையும் கொன்ற யானை
நீண்ட நேரமாக அங்கு சுற்றித் திரிந்த யானை, மக்கள் விரட்டியதைத் தொடர்ந்து வெள்ளானபாளையம் பகுதிக்குள் நுழைந்தது. அதிகாலை 5 மணியளவில் தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரை மிதித்துக் கொன்றது.
இதைத் தொடர்ந்து பழனிசாமி இறந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் ஒற்றை யானை அவருடைய தோட்டத்திலேயே மறைவாகத் தங்கியிருந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர், 7 வனத்துறை அலுவலர்கள், ஆயுதம் தாங்கிய கலவரத் தடுப்பு போலீஸார் ஆகியோர் அங்கு திரண்டனர்.
யானையைப் பிடிக்க பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் ஆகியோரும் வந்தனர். மயக்க ஊசி செலுத்தும் வனச்சரகர்கள் மூவர் சுமார் 12.30 மணிக்கு மயக்க ஊசியைச் செலுத்தினர்.
முகாமுக்குக் கொண்டு செல்லத் திட்டம்
ஒற்றை யானையை மயக்க ஊசிச் செலுத்திப் பிடித்த வனத்துறையினர், அதை முகாமுக்குக் கொண்டு சென்றனர். இதனிடையே மயக்க நிலையிலேயே யானையை பிடிக்க சாடிவயலில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டது. 6 பொக்லைன் இயந்திரங்கள், கும்கி யானை உதவியுடன் மதம் பிடித்த யானை மீட்கப்பட்டது. சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் யானை லாரியில் ஏற்றப்பட்டது.
அமைச்சர்கள் ஆய்வு
வனத்துறை அமைச்சர் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பாதிக் கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய இழப்பீடு வழங்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
பிடிபட்ட யானையை பொள்ளாச் சியை அடுத்துள்ள டாப்சிலிப் வரகளி யாறு யானைகள் முகாமுக்கு வனத் துறையினர் கொண்டு சென்றனர். வழியில் மயக்கம் தெளியக்கூடும் என்பதால் கால்நடை மருத்துவர்கள் குழுவும் உடன் சென்றது.
ஒரே நாளில் கோவையின் தெற்கு மாவட்டப் பகுதியையே அச்சத்துக்கு உள்ளாக்கிய காட்டு யானை பிடிபட்டதைக் காண அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இறுதியாக யானை கொண்டு செல்லப்படும் போது நிம்மதியில் ஆரவாரம் செய்தனர்.
வழக்கமாக பிடிக்கப்படும் யானைகள் பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் கோழிகமுத்தி வனத்துறை முகாமுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கே யானையின் ஆக்ரோஷத்தைக் குறைக்க அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ஜெ.மனோகரன்