சிறு வேளியநல்லூர் கிராமத்தில் பணிக்கு வராத தலைமை ஆசிரி யரைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாண வர்களும் பெற்றோர்களும் நேற்று பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சிறுவேளிய நல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் 118 மாணவ, மாணவிகள் படிக் கின்றனர். தலைமை ஆசிரியர் காளிதாஸ் உட்பட ஆசிரி யர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கடந்த 3 மாதங் களாக தலைமை ஆசிரியர் காளிதாஸ் பள்ளிக்கு வராமல் இருப்பதாகக் கூறி, மாணவர்களும் பெற்றோர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்கள் கூறும் போது, ‘‘கடந்த 3 மாதங்களாக தலைமை ஆசிரியர் காளிதாஸ் பள்ளிக்கு வரவில்லை. இதனால், வகுப்பு நேரங்களில் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் விளையாடி வருகின்றனர். மாண வர்களை வழி நடத்த மற்ற ஆசிரியர்களும் முன்வரவில்லை. மேலும் அவர்களும், பள்ளிக்கு சரியாக வருவதில்லை. இப்படி இருந்தால் மாணவர்களின் கல்வித் தரம் எவ்வாறு மேம்படும்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு புகார் மனு அனுப்பி உள்ளோம். தலைமை ஆசிரியரை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.
தகவலறிந்த செய்யாறு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கமலகண்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று, பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்களின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அவரது அறிக்கை கிடைத்ததும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.