தரமான ஜரிகை கிடைக்காததால் தமிழகத்தில் உள்ள பட்டு நெசவாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் பட்டுப் புடவைகளுக்கு தனி மவுசு உண்டு. உயர்ந்த தரமும் நேர்த்தியான உயர்தர ஜரிகைகளால் தயாரிக்கப்படுகின்றது என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.
பட்டுப் புடவைகளுக்கு அழகைக் கூட்டுவது பட்டு நூலும், ஜரிகையும்தான். பட்டுப் புடவைகளுக்கான ஜரிகை, தமிழ்நாடு ஜரிகை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டாலும், அதன் உற்பத்தி, தேவையை விடக் குறைவாகவே இருந்தது.
அதனால் சூரத்தில் தயாரிக்கப்படும் ஜரிகையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஜரிகை முகவர்கள், சூரத்தில் இருந்து ஜரிகையை வாங்கி வந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்கின்றனர். மாதம்தோறும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்த ஜரிகைகளின் தரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வாங்கும் ஜரிகைகள் தரமற்று இருப்பதால், பட்டு நெசவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டு கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய தரமற்ற ஜரிகைகளை, நெசவாளர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டு, “தரமான ஜரிகை வழங்கும் வரை பணி செய்யமாட்டோம்…” என்கின்றனர்.
ஜரிகையின் தரம் குறைந்ததைக் கண்டுபிடித்தது எப்படி?
நெசவாளர்கள் புடவையை நெய்யும்போது, ஜரிகையை சிறிதளவு கிள்ளி எறிவார்கள். சில நாட்கள் இப்படி சேமித்ததை தேவைப்படும்போது விற்பனை செய்வது வழக்கம். பொதுவாக கிராம் ஒன்றுக்கு ரூ.20 கிடைக்கும். அண்மையில் கூட்டுறவு சங்கம் ஒன்றில் உறுப்பினராக உள்ள ஒரு நெசவாளர், தன்னிடம் இருந்த கழிவு ஜரிகையை விற்பனை செய்ய சென்றுள்ளார்.
“அரசு நிர்ணயித்த அளவு ஜரிகையில் வெள்ளி இல்லை. அதனால் கிராம் ஒன்றுக்கு ரூ.12 மட்டுமே வழங்கப்படும்” என்று கழிவு ஜரிகை கொள்முதல் வியாபாரி தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த நெசவாளர், ஜரிகையை, மத்திய அரசின் பட்டு வாரிய அலுவலகத்தில் உள்ள ஜரிகையின் தரத்தை மதிப்பிடும் கருவியிலும் சோதித்தார். ஜரிகையில் 40 சதவீதம் இருக்க வேண்டிய வெள்ளி, வெறும் 18 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தான் தயாரித்த பட்டுச் சேலைகளை சோதனை செய்தபோது, அதிலும் 18 சதவீதம் மட்டுமே வெள்ளி இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நெசவாளர்கள், தங்களிடம் இருந்த தரம் குறைவான ஜரிகைகளை, பட்டு கூட்டுறவு சங்கங்களிடம் ஒப்படைத்து, புடவை நெய்ய மறுத்துள்ளனர்.
நெசவாளர்கள் தவிப்பு
உஷாரான பட்டு கூட்டுறவு சங்கங்கள், பெட்டியில் ஒன்றை மட்டும் பரிசோதிப்பதை தவிர்த்து, வாங்கும் அனைத்து ஜரிகையையும் சோதனை செய்துள்ளது. இதில்
அரசு வரையறுத்துள்ள விகிதத்தில் வெள்ளி இல்லை. இதைத் தொடர்ந்து, ஜரிகை முகவர்களிடமிருந்து வாங்கிய ஜரிகைகள், அவர்களிடமே திருப்பித் தரப்பட்டுள்ளது. இதனால், தரமான ஜரிகை கிடைக்காமல், வேலைவாய்ப்பை இழந்து நெசவாளர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியூ) மாநில பொதுச்செயலர் இ.முத்துகுமார் கூறியதாவது:
தமிழகத்தில் காஞ்சிபுரம், கும்பகோணம், திருபுவனம், ஆரணி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 86 பட்டு கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
காஞ்சி பட்டின் தரத்தை பாதுகாக்கும் வகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நெசவாளர்களுக்குத் தரமான ஜரிகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமற்ற ஜரிகையை விநியோகித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் ஜரிகை வர்த்தக உரிமையை ரத்து செய்ய வேண்டும். தரமான ஜரிகை விற்பனை செய்வோரிடம் பட்டு கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக ஜரிகை கொள்முதல் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்” என்றார்.