கடந்த தி.மு.க ஆட்சியில் குட்டைக்குள் கட்டப்பட்ட சமத்துவபுர வீடுகள் மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கியும், மற்ற காலங்களில் தப்புத்தண்டா நடப்பதற்கான புகலிடமாகவும் மாறியுள்ளன.
கோவை அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் ஒன்பது ஏக்கர் பரப்பளவுள்ள நீர்நிலைக் குட்டையில் மழைக்காலங்களில் குளம்போல் நீர் தேங்குவதும், அதில் பொதுமக்கள் குளிப்பதும், துணிகள் துவைப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மக்களே அதிரும் வண்ணம் இக் குட்டையின் பரப்பை சமப்படுத்தி நூறு வீடுகளை கொண்ட சமத்துவபுரம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள், இந்த குட்டையில் வீடுகள் கட்டுவது அபாயகரமானது, மேற்குப் பகுதியில் ஊருக்கான சுடுகாடும், வடக்கு கிழக்குப் பகுதியில் குடியிருப்புக்களும் உள்ளன என்றனர்.
மழைக்காலங்களில் வெள்ளம் வந்தால் அது புதிதாக கட்டப்படும் சமத்துவபுர வீடுகளுக்கு மட்டுமல்ல, சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புக்களுக்கும் பாதகமாக விளையும் என்று எச்சரித்துள்ளனர். கிராமசபைக் கூட்டங்களிலும் இதை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதிகாரிகளும், ஆட்சியில் உள்ள வி.ஐ.பிக்களும், 'இந்த பகுதி குட்டையோ குளமோ அல்ல. நத்தம் புறம்போக்கு பகுதி என்றுதான் அரசு ஆவணத்தில் உள்ளது. எனவே இதில் தாராளமாக வீடுகள் கட்டலாம். மழைக்காலங்களில் வெள்ளம் வந்து தேங்கினால் அதை அப்புறப்படுத்த வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
அரசு அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் கலந்தாலோசித்து கோடிக்கணக்கில் நிதிஒதுக்கி சமத்துவபுர வீடுகளைக் கட்டினர். அந்த நேரத்தில் பெய்த பெருமழையால் கட்டி முடிக்கப்படாத வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் சமாதானம் பேசி, சமத்துவபுரத்தில் தேங்கிய நீரை சுடுகாட்டுக்கு திருப்பிவிட்டுள்ளனர். இதில் சுடுகாடு நீரில் மூழ்கியது. அதற்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
மீண்டும், இந்த சமத்துவபுர வீடுகள் கட்டும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் சிலர் இந்த குட்டை சேற்றில் மாட்டியுள்ளனர். அவர்களை பொதுமக்கள் கயிறுகட்டி இழுத்து காப்பாற்றினர். கட்டிடம் கட்டுபவர்கள் பணியை கைவிட்டுவிட்டனர்.
இந்த நிலையில் சமத்துவபுரம் வீடுகள் பாதியில் நிற்க, மழைவரும்போது இந்த வீடுகள் குட்டையில் மூழ்குவதும், இந்த வழியே செல்லும் மக்கள் அதை வேடிக்கை பார்ப்பதும், வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து ஊர் பிரமுகர்கள் கூறியது:
இது குட்டையல்ல, நத்தம் புறம்போக்குன்னு ஆவணங்களில் இருக்குன்னு அதிகாரிகள்தான் சொன்னாங்க. மேலிடத்திலிருந்தும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க. அதனால கட்டடம் உருவாகியது. பிறகு மக்கள் சொன்னதே பலித்தது. இப்போதும் மழை பெய்தால் மக்கள் இருக்கவே முடியாது. அப்படித்தான் இங்கே சமத்துவபுரத்தை கட்டியிருக்காங்க. சாதாரண பொதுமக்கள் ஏமாந்து ஒரு இடத்துல வீட்டை கட்டிடலாம்.
இத்தனை அதிகாரிகள், இஞ்சினியர்கள், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் சேர்ந்து ஒரு நூறு வீடுகளை சமத்துவபுரம்ன்னு கட்டியிருக்காங்கன்னா அவங்களுக்கு இதுல உள்ள வில்லங்கம் தெரியாமலா இருந்திருக்கும். ஏழைபாழைகள் எங்கே வேண்ணா எப்படி வேண்ணா இருந்துக்குவாங்க.
நமக்கு ஏதோ ஒரு பணி நடந்தா போதும். அதுல ஊழல் செஞ்சா போதும்ங்கற எண்ணந்தான் இந்த மாதிரி குளறுபடியான ஒரு சமத்துவபுரம் குட்டைக்குள் அமைந்ததுக்கு காரணம். உடனடியாக இந்த சமத்துவபுரம் வீடுகளை அகற்றணும். தப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்ன்னு மக்களும் கட்சிக்காரங்க பலரும் கலெக்டர்கிட்டவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிட்டவும் மனு மேல மனு கொடுத்தாச்சு. அவங்களும் நடவடிக்கை எடுக்கறேன்னு வார்த்தையில சொல்லீட்டே இருக்காங்களே ஒழிய இந்த நாள் வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இப்பவும் இங்கே ராத்திரியானா தப்புத்தண்டா நடக்குது. தண்ணியடிக்கிறவன், சீட்டாடறவன், வேறுபல தப்புக்களும் நடக்குது. அதுக்கு யார் காவல்காக்கறதுன்னு வேண்டாம். இப்ப இந்த ரோட்டுல வர்றவங்களுக்கும் போறவங்களுக்கும் இது ஒரு காட்சிப் பொருளா ஆயிடுச்சு. இதை இடிச்சு அப்புறப்படுத்தினாங்கன்னா பராவாயில்லீங்க', என்று தெரிவித்தனர்.