லட்சத்தீவில் பகுதியில் நேற்று முன்தினம் உருவாகி இருந்த மேல் அடுக்கு சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர்ந்து உள்ளது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது.
இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் முடிந்த மழை நிலவரப்படி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 8 செ.மீ., குன்னூர் மற்றும் குன்னூர் (பிடிஒ) தலா 6 செ.மீ. மழையும், சிவகங்கை மாவட்டம் திரிபுவனத்தில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
புதன்கிழமை அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.