சைக்கிள் கேப்பில் முதல்வராக நினைக்கிறார் ஸ்டாலின் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ''ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்கக் கோருவது முறையல்ல. திமுக செயல் தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் முதல்வர் கனவு அவரைத் தூங்கவிடாமல் செய்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சைக்கிள் கேப்பில் முதல்வராக வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருப்பதால் ஸ்டாலின் கனவு பலிக்காது. அது பகல் கனவாகவே முடியும்'' என்றார்.