தமிழகம்

மாமல்லபுரத்தை அடுத்த வெண்புருஷம் கிராமத்தில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் இளைஞர்கள்

செய்திப்பிரிவு

வெண்புருஷம் கிராமத்தில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த வெண்புருஷம் கிராமத்தில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இக்குளத்தின் தண்ணீரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீராக அப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் பெரும் உதவியாக இந்த குளம் விளங்கியுள்ளது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால் குளம் தூர்ந்துள்ளது. இதனால், மழையின்போது கிடைக்கும் சிறிதளவு தண்ணீர் குளத்தில் தேங்கியுள்ள கழிவுகளால் மாசடைந்து வருகிறது. இதையடுத்து, குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கல்பாக்கம் நகரிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், குளத்தை நாமே சீரமைக்கலாம் என வெண்புருஷம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முடிவு செய்து, அதற்கானப் பணிகளை தொடங்கியுள்ளனர். இதில், முதற்கட்டமாக குளத்தில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, வெண்புருஷம் பகுதி இளைஞர்கள் கூறியதாவது: குளத்தில் கழிவுப் பொருட்கள் தேங்கியுள்ளதால், மழையின்போது மற்ற பகுதிகளில் இருந்து குளத்துக்கு வரும் மழைநீர் சுகாதாரமற்ற கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. அதனால், விடுமுறை நாட்களில் குளத்தை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்து அதற்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT