தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 71.93 அடி (34.378 டிஎம்சி) தண்ணீர் இருந்தது. அப்போது நீர் வரத்து விநாடிக்கு 4,565 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. ஆனால், தற்போது 45.63 அடி (15.171 டிஎம்சி) உயரத்துக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 54 கன அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 1,200 கன அடியாகவும் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறும்போது, “அணையின் தற்போதைய நீர் இருப்பு 15.17 டிஎம்சி. இதில் டெட் ஸ்டோரேஜ் அளவு 2.19 டிஎம்சி இருக்க வேண்டும். மீதமுள்ள சுமார் 13 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும். குடிநீருக்காக வெளியேற்றம், ஆவியாதலால் ஏற்படும் விரயம் போன்ற காரணங்களால் அணையில் இருக்கும் தண்ணீர் ஒரு மாத குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்” என்றனர்.
கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. மொத்தம் 37.10 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் தற்போது 4.59 டிஎம்சி (கடந்த ஆண்டு 6.43 டிஎம்சி) தண்ணீரும், 8.50 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஹராங்கியில் 1.04 டிம்சி (கடந்த ஆண்டு 1.43 டிஎம்சி) தண்ணீரும் உள்ளது.
மேட்டூருக்கு நேரடியாக நீர்வரத்தைக் கொடுக்கும் 49.45 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கேஆர்எஸ் அணையில் தற்போது 9.61 டிஎம்சி (கடந்த ஆண்டு 9.24 டிஎம்சி) தண்ணீரும், 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினியில் 2.46 டிஎம்சி (கடந்த ஆண்டு 9.99 டிஎம்சி) தண்ணீரும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யத் தொடங்கினாலும், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஏற்படும். பருவமழை கூடுதலாக பெய்தால் மட்டுமே காவிரி குடிநீரை நம்பியுள்ள சேலம் மாநகராட்சி உள்ளிட்டவை களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்.