ஆழ்வார்பேட்டை பங்களா வீட்டில் கைப்பற்றப்பட்ட சாமி சிலைகளை சோதனை செய்ய மத்திய தொல்லியல் துறையினர் இன்று சென்னை வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை அருகே முரேஸ்கேட் சாலையில் ஒரு பங்களா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 31-ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி, 71 கற்சிலைகள், 41 ஐம்பொன் சிலைகள், 75 பழமையான ஓவியங் களை பறிமுதல் செய்தனர். சிலைகளை பதுக்கி வைத்திருந்த தீனதயாள்(78) சோதனையின் போது வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த மான்சிங் (58), குமார் (58), ராஜாமணி (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும், சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் ஏஜென்ட்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
போலீஸார் தேடிவந்த தீனதயாள், கடந்த 3-ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலத்தில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் முன்பு ஆஜராகி சரண் அடைந்தார். அவரிடம் தினமும் காலை முதல் இரவு வரை போலீஸார் விசாரணை நடத்திவிட்டு, வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.
‘‘கைப்பற்றப்பட்டுள்ள சிலைகள் எந்தெந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டவை, சிலை கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பவை உட்பட பல கேள்வி களுக்கான விடையை அவரிடம் இருந்து வாங்க வேண்டி உள்ளது. எங்கள் விசாரணை முடிந்த பின்னரே அவரை நீதிமன்றத்தில் ஒப்படைப்போம்’’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிசிலைகளை ஆய்வு செய்து அதன் மதிப்பு மற்றும் பழமை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டெல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறை அலுவலகத்துக்கு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து இன்று பெங்களூருவில் இருந்து தொல்லியில் துறை நிபுணர்கள் சென்னை வருகின்றனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர் சிலைகள் குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்கும். அந்த தகவல்கள் கிடைத்த பின்னர் நீதிமன்றத்தில் சிலைகள் ஒப்படைக்கப்படும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
நேற்று காலையில் விசாரணைக் காக கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வந்த தீனதயாளை, ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது பங்களா வீட்டுக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். தீனதயாளிடம் கேட்பதற்காக 140 கேள்விகள் தயார் செய்து போலீஸார் வைத்துள்ளனர். விசாரணை முடிந்து மாலையில் தீனதயாளை போலீஸார் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
போலீஸில் சரண் அடைந்த தீனதயாளை அவரது வயோதிகத் தின் காரணமாக போலீஸார் கைது செய்யவில்லை. ஆனால் தினமும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் அவர் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.