தமிழகம்

காம‌ன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பா?- விஜயகாந்த் கண்டனம்

செய்திப்பிரிவு

கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டால் அது மகிந்த ராஜபக்சேவுக்கு மரியாதையையும், மதிப்பையும் தேடித் தருவது போலாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஏக மனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சர்வதேச அமைப்பில் கலந்து கொள்வதாகும் என்றும், இந்திய இலங்கை உறவை மட்டுமே வைத்து இதைப் பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் தரப்பில் நியாயம் பேசப்படுகிறது. சர்வதேச அமைப்பு என்று சொல்லி கலந்துகொள்ள முடிவெடுத்து இருப்பது, இந்தியா மனித உரிமை மீறல்களை அனுமதிக்கிறது என்றுதானே பொருள்படும். எந்த காரணத்தைச் சொன்னாலும், பிரதமரின் இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள ஏழரைக் கோடி மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதாகவே கருதப்படும். எனவே பிரதமர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT