கிண்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்காக அமைக் கப்பட்டுள்ள மேம்பாலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மூச்சுத் திணறும் அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.
சென்னையின் புறநகர் பகுதி யிலிருந்து மாநகர் பகுதிக்கான நுழைவு வாயிலாக கிண்டி உள்ளது. ஒரு காலத்தில் சிறு புறநகர் பகுதியாக இருந்த கிண்டி, தொழிற்பேட்டைகளின் வரவுக்குப் பின்னர் பரபரப்பானது. கிண்டியிலிருந்து தாம்பரம், கடற்கரை, பழைய மகாபலிபுரம் சாலை, கோயம்பேடு, தி.நகர் என நகரின் முக்கியப்பகுதிகள் அனைத்துக்கும் அரை மணி நேரத்துக்குள் சென்று விடலாம். இதனால், கிண்டியில் ஏராளமான குடியிருப்புகள் வரத்தொடங்கின. கிண்டி தொழிற்பேட்டையில் ஆரம்பித்து பழைய மகாபலிபுரம் சாலை, வேளச்சேரி ஆகிய இடங்கள் வரை ஐடி நிறுவனங்கள் வரவே, காலை, மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமானது. இங்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலை பயன்படுத்துகின்றனர்.
இதனால், தினசரி காலை, மாலை வேளைகளில் மட்டும் குறைந்தது ஆயிரக்கணக்கானோர் கிண்டி ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், கிண்டி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிச் செல்வது ஒவ்வொரு பயணிக்கும் மிகப்பெரிய போராட்ட மாக உள்ளது. கிண்டி ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் அந்தளவுக்கு நெரிசல் உள்ளது. சமயத்தில் வயதானவர்கள் பலர் மூச்சுத்திணறி மயக்கமடையும் அளவுக்கு நிலைமை உள்ளது என்று பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக மோகன்தாஸ் என்னும் ஐடி ஊழியர் கூறியதாவது:
நான் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி புரிகிறேன். நான் தாம்பரத்திலிருந்து கிண்டிக்கு தினசரி காலை 9 மணிக்கு வருவேன். கிண்டியில் ரயிலைவிட்டு இறங்கி மேம்பாலத்துக்கு செல்ல அதன் படிக்கட்டுக்களை கடக்கவே 10 நிமிடம் ஆகிறது. அதற்குப் பிறகு மேம்பாலத்தை விட்டு கிழே இறங்க 10 நிமிடம் ஆகிறது. எனது பயண நேரத்தை விட கிண்டி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு அதிகம் காத்திருக்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு நெரிசல் உள்ளது. மூச்சுக்கூட விட முடியாது. இதனை பயன்படுத்தி திருடர்கள் ஊடுருவி செல்போன், நகைகளை திருடுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பெண்கள், குழந்தை கள், முதியவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. எனவே, கிண்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்ல கூடுதலாக இன்னொரு மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காலை 8 மணி முதல் 10 மணி வரை கூட்டம் இருப்பது உண்மைதான். கிண்டி ரயில் நிலைய மேம்பாலம் அகலமானது. ஆனால், கூட்டமாக வரும் பொதுமக்கள் அவசரகதியில் ஒழுங்கற்ற முறையில் செல்கின்ற னர். இதனால், நெரிசல் ஏற்படு கிறது. கொஞ்சம் பொறுமை காத்து நிதானமாக சென்றால், நெரிசல் ஏற்படாது, முந்தி அடித்துக் கொண்டு செல்வதுதான் பிரச்சினைக்கு காரணம், கூட்ட நெரிசலை குறைக்க, ரேஸ் கோர்ஸ் பகுதியில், வெளி யேறுவதற்காக, மேம்பாலத்தின் பக்கவாட்டில் கூடுதலாக ஒரு வழியையும் திறந்துவிட்டுள்ளோம்’ என்றனர்.