தமிழகம்

உச்ச நீதிமன்ற அறிவுரைகளை ஏற்று அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுக: தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற அறிவுரைகளை கவனத்தில் கொண்டு, அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிக்கைகள், மீடியாக்கள் மீது கடந்த 2011 மே முதல் 2016 ஜூலை 28 வரை 213 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.தங்கள் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை எதிர்த்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முதல்வருக்கு அறிவுரை அளிக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர். ''ஆரோக்கியமான ஜனநாயகம் வேண்டும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முடியாது, நீங்கள், பொது வாழ்க்கையில் இருப்பதால்,சிலர் உங்களை விமர்சனம் செய்வர். அந்த விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கொள்கை விமர்சனங்கள் அவதூறு பேச்சுக்கள் ஆகாது.

அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளீர்கள், தேவையெனில் நீங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். அரசியல் விரோதத்தை தீர்க்க அவதூறு சட்டத்தை பயன்படுத்தி உள்ளீர்கள், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே, இதுபோல் அவதூறு வழக்கு சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது.மற்ற மாநிலங்களில் இருந்து இது போன்ற வழக்குகள் இங்குவரவில்லை.

உடல் நலம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு, ஓய்வு எடுப்பது குறித்து கூறியதற்கு, குடிநீர் பற்றாக்குறை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறியதற்கு எல்லாம் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது,அவதூறு வழக்கு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டதாலும் அந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஜனநாயகம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இல்லை எனில் மக்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.

விமர்சனம், எதிர்ப்பு, சகிப்புத் தன்மை, எதிர்பார்ப்பு போன்ற அனைத்தும் அடங்கியதே ஜனநாயகம்.விமர்சனம் செய்ததற்காக ஜனநாயகத்தின் இறக்கையை வெட்டிவிடக் கூடாது. மக்களுக்கான அரசு என்பது தான் ஜனநாயகம், அதனை குலைத்துவிட வேண்டாம்'' என நீதிபதிகள் தங்களது அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள அறிவுரைகளை தமிழக அரசு குறிப்பாக முதல்வர் கவனத்தில் கொண்டு, எதிர்க் கட்சியினர், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று நல்லதொரு முன்னுதாரணத்தை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT