தமிழகம்

அனைத்து ஊழல் வழக்குகளையும் விரைந்து விசாரிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் லஞ்சம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப் படுத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மற்றும் மூவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு நியாயம் கேட்டு மேல்முறையீடு செய்யக்கூடிய சட்ட வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம், இந்த பிரச்சினையை அதிமுகவினர் தமிழர்-கன்னடர் பிரச்சினையாக மாற்றக்கூடாது.

சட்டப்பிரிவு 355 (ஆட்சி முடக்கம்) அல்லது 356-ஐ (ஆட்சிக் கலைப்பு) பயன்படுத்துவது குறித்து பாஜக பேசிவருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் வலுசேர்க்கும் வகையில் நடந்துவருகின்றன. இது ஜனநாயகத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் முரணானது. இதுதொடர்பாகவும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து உயர்மட்ட ஊழல் வழக்குகளையும் உடனுக் குடன் விசாரித்து தவறு இழைத்த வர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். லோக்பால் சட்டத்தின்படி லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT