‘குரூப்-பி, சி மற்றும் டி’ பதவிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் இன்று முதல் ஒரு மாதத்துக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணிபுரியும் குரூப்-பி, சி, டி, பதவிகளில் குறைந்த அளவே ஊழியர்கள் இருப்பதால் கூடுதலாக ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். அதேபோல், அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை ஊழியர் சங்கம் விடுத்தது.
ஆனால், குரூப்-பி, சி, டி பதவிகளில் கூடுதல் ஊழியர்களை நியமிப்பதற்கு பதிலாக ‘குரூப்-ஏ’ அதிகாரி பணியிடங்கள் அதிகளவில் நிரப்பப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் இன்று முதல் ஒரு மாதத்துக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, இன்று (10-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை அனைத்து துணை மற்றும் மண்டல வைப்பு நிதி ஆணையர் அலுவலகங்கள் முன்பு மதிய உணவு இடைவேளையின்போது கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை முழக்கம் எழுப்புதல்.17-ம் தேதி ஊழியர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி நிர்வாகத்திற்கு அலுவலர்களின் கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பில் உள்ள குறைபாடுகளையும், ஊழியர் நலனில் உள்ள அலட்சியப் போக்கினை உணர்த்துதல்.
27 மற்றும் 28-ம் தேதிகளில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்துதல். மே 11 மற்றும் 12-ம் தேதிகளில் துணை மற்றும் மண்டல வைப்பு நிதி ஆணையாளர் அலுவலகம் முன்பாக குரல் எழுப்பும் போராட்டமும், மே 23-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் நடைபெறும் என வருங்கால வைப்பு நிதி ஊழியர் சங்க அம்பத்தூர் கிளையின் செயலாளர் பி.சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.