வரலாறு காணாத வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆவின் பால் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில், நவம்பர் 4-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. ஆட்சி 2011-இல் பொறுப்பேற்றதில் இருந்து மூன்று ஆண்டுகளாக பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, போக்குவரத்துக் கட்டணம் உயர்வு என்று மக்கள் மீது சுமையை ஏற்றியது. தற்போது மீண்டும் ஒருமுறை கட்டணங்களை உயர்த்துவதற்கு முதல் கட்டமாக ஆவின் பால் விலையை தாறுமாறாக ஏற்றி உள்ளது.
2011-ல் சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை ஒரு லிட்டர் ரூபாய் 18.50 ஆக இருந்ததை தற்போது 84 விழுக்காடு அளவு உயர்த்தி, ரூபாய் 34/- ஆக அதிகரித்துள்ளனர். இந்த விலை ஏற்றம் ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கக்கூடியது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதற்காகவே ஆவின் பால் விலையை கூட்டுகிறோம் என்று முதலமைச்சர் கூறி இருப்பது நியாயமற்றது.
இலவச திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடும் அ.தி.மு.க. அரசு, பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம் அளித்து பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தரவேண்டும்.
கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமான ஆவின் நிறுவனம் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல்களால் வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அரசின் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் ஏதும் இன்றி தனியார் பால் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தினமும் சுமார் 25 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்குக் கட்டுபடியான கொள்முதல் விலை கிடைக்காததால், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் நலிவடைந்து வருகின்றன. இதனால், ஆவின் கூட்டுறவு மையங்கள் 12 ஆயிரத்திலிருந்து, 8 ஆயிரமாகக் குறைந்துவிட்டன.
இன்றைய நிலையில், கால்நடைகள் விலை ஏற்றம், பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பால் உற்பத்தி செலவும் கூடி இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு 7 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 9 ரூபாயும் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கோரி வருகிறது. ஆனால், முதலமைச்சர் பன்னீர்செல்வம் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 5 ரூபாயும், எருமை பாலுக்கு 4 ரூபாயும் உயர்த்துவதாகக் கூறுவது போதுமானது அல்ல. எனவே, தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம் அளித்து, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.
வரலாறு காணாத வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆவின் பால் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில், நவம்பர் 4-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் என் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.