அழிக்கப்பட்டு வரும் தமிழ் மொழியை காக்க தமிழறிஞர்களும் மாணவர்களும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொங்குதமிழ் வளர்ச்சி அறக் கட்டளை சார்பில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அறக்கட் டளை நிறுவனர் ராமதாஸ், தலை வர் ஜி.கே.மணி, சென்னை பல் கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொற்கோ, கவிஞர் காசி அனந்தன், தமிழறிஞர் நன்னன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
தமிழ் மொழியை திட்டமிட்டு அழிக்கிறார்கள். ஒரு காலத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என சொல்லப்பட்டது. இப்போது தமிழறிஞர்கள்கூட எங்கே தமிழ் என கேட்கிறார்கள். கல்விக்கூடங்கள், ஊடகங்கள், உயர் நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் என எங்கும் தமிழ் இல்லை. தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும் என சொல்வது வெட்கக்கேடாகவும் வேதனையாகவும் உள்ளது.
தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் இருப்பார்கள். இதில், 10 ஆயிரம் பேராவது களத்தில் இறங்கி போராட வேண்டும். குறிப் பாக, கல்லூரிகளில் தமிழ் படிக்கும் மாணவர்கள், புலவர் பட்டத்துக்கு படிப்போர் அனைவரும் அழிக் கப்பட்டு வரும் தமிழை காக்க வீதிக்கு வந்து போராட வேண்டும். போராடினால்தான் அரசு நம் கோரிக்கையை நிறைவேற்றும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
தமிழறிஞர் நன்னன் பேசும் போது, ‘‘தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதை முறையாக பின்பற்ற வேண்டும். அரசு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் அனுப்ப வேண்டும்’’ என்றார்.