கோவை நகரின் மையப் பகுதியாக இருக்கும் காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. நஞ்சப்பா சாலை பார்க்கேட் சந்திப்பிலிருந்து சத்தி சாலை ஆம்னி பேருந்து நிலையம் வரை 1756 மீட்டர் நீளத்துக்கு முதல் அடுக்கு மேம்பாலமும், 100 அடி சாலையிலிருந்து, சின்னசாமி சாலை ஆவாரம்பாளையம் சந்திப்பு வரை 1226 மீட்டருக்கு இரண்டாம் அடுக்கு மேம்பாலமும் கட்டப்பட்டு வருகிறது. ரூ.162 கோடி செலவில் கட்டப்படும் இந்த இரண்டு பாலங்களால் நகரின் போக்குவரத்து பிரச்சினைகள் பெருமளவு குறையும் வாய்ப்புள்ளது.
இதனிடையே, நஞ்சப்பா சாலையில் மேம்பாலத்தை ஒட்டியுள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்தியசிறை வளாகத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டன.
மேலும், மேம்பாலத்தின் நுழைவுப் பகுதியான பார்க்கேட் சிக்னலில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதைத் தடுக்க ரவுண்டானா அமைக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், பார்க்கேட் சிக்னலை ஒட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்பதற்காக திட்டம் தள்ளிப்போனது. நீண்ட இழுபறிக்குப் பிறகு வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்த லேடீஸ் கிளப் கட்டிடம் இடிக்கப்பட்டு ரவுண்டானா அமைப்பதற்கான இடம் தயாராகியுள்ளது.
இதைத்தொடர்ந்து ரவுண்டானா அமையக்கூடிய இடத்தில் இருந்த பயனளிக்ககூடிய மரங்களை மறுநடவு செய்ய சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அங்கிருந்த மரங்களில் மறுநடவு செய்யும் வாய்ப்புள்ள, பயனளிக்கக்கூடிய அரச மரம், வேம்பு மற்றும் 2 நெட்டிலிங்க மரங்களையும் வேறு இடத்தில் மறு நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்முயற்சியில் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் உதவியுடன் மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், 60 வருட பழமையான அரசமரம் வேரோடு பெயர்த்து எடுத்து, கோவை மத்திய சிறை வளாகத்தில் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்தார். அவர் கூறும்போது, ‘கோவை நகருக்கு வளர்ச்சிப் பணிகள் அவசியம். அதற்காக மரங்களை வெட்டுவது என்பது சூழலை பாதிக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு பொள்ளாச்சி சாலை, விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த மரங்கள் வேறு பகுதியில் நடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரவுண்டானா அமையும் இடத்தில் இருந்த 4 மரங்கள் மறுநடவு செய்யப்பட்டன. அடுத்ததாக, வடவள்ளியில் பேருந்து முனையம் அமையும் இடத்தில் 4 மரங்கள் மறுநடவு செய்யப்பட உள்ளன’ என்றார்.
முதல்கட்ட மேம்பாலப் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடைய வாய்ப்புள்ள நிலையில், அதைத் தொடர்ந்து பார்க்கேட் சிக்னல் ரவுண்டானா பணிகளும் மிகவிரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கைத்தறி மைதானத்தின் இடத்தையும் மாநகராட்சியிடம் கேட்டுப் பெறப்பட்டால் நெரிசல் இல்லாத அளவுக்கு ரவுண்டானா அமைய வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகின்றனர்.