ஜல்லிகட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டதிருத்த மசோதாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை கையெழுத்திட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுப்பப்படும் இந்த மசோதா, தமிழக அரசு இதழில் வெளியிட்ட பின் உடனடியாக அமலாக உள்ளது.
ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கக் கோரி பொங்கலுக்கு பின் தமிழகத்தில் அறப்போராட்டம் வெடித்தது. இதன் காரணமாக செயலில் இறங்கிய தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்தர மோடியை நேரில் சந்தித்து முறையிட்டார். இதில், நடைபெற்ற ஆலோசனையின் பேரில் ’மிருகவதை தடை சட்டம் 1960’-ல் திருத்தம் செய்து ஜல்லிகட்டு மீதான தடையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது.
பொதுப்பட்டியல் எண் 3-ல் இடம் இடம்பெற்றுள்ள சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்வது அவசரசட்டம் இயற்றுவது எனவும், அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பது என்றும் திட்டமிடப்பட்டது. இதற்கான சட்டமுன்வடிவை, டெல்லியில் இருந்தபடியே தயாரித்த முதல் அமைச்சர் பன்னீர்செல்வம், மாநிலங்களின் அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய பின் தமிழகம் திரும்பினார்.
இதன் பரிசீலனை 3 நாட்களுக்குள் முடிந்து கடந்த 21 ஆம் தேதி தமிழக ஆளுநரால் அவசரசட்டமாக இயற்றப்பட்டது. இதனால், ஜல்லிகட்டு மீதான தடை நீக்கப்பட்டிருந்தது. இதன் ஆயுள் 6 மாதம் என்ற சர்ச்சையால் சட்டப்பேரவை கூட்டி 23 ஆம் தேதி நிரந்தர சட்டதிருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. பிறகு, குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில், சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகிய மத்திய அமைக்கங்களின் கருத்துகள் பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர் இன்று மாலை கையெப்பம் இட்டுள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம் கூறுகையில், ‘இதுபோன்ற அவசர சட்டதிருத்தம் மாநில அரசால் இயற்றப்பட்டு இவ்வளவு விரைவாக வெளியிடப்பட்டதில்லை. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் தமிழக அரசிற்கு அனுப்பப்படும். பிறகு, இந்த நிரந்தர சட்டதிருத்த மசோதாவை தமிழக அரசு இதழில் வெளியிட்ட பின் உடனடியாக அது அமலக்கு வரும்.’ எனத் தெரிவித்தனர்.
இதற்கு முன்னதாக தமிழக அரசு இயற்றிய அவசரசட்டதிருத்தத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் இடப்பட்ட மனுக்கள் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக அவசரசட்டத்தை மசோதாவாக இயற்றி அமலாக்க வேண்டும் என்பது மத்திய, மாநில அரசுகளின் நோக்கமாக இருந்தது, இவை அனைத்திற்கும் காரணமாக இருந்திருப்பது தமிழகத்தில் இளைஞர்கள் மாநிலம் முழுவதிலும் நடத்திய அறப்போராட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.