நாமக்கல்லில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 6 பயணிகள் பலியாகினர், 12 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புத்தன்சந்தை அருகே இன்று அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, புத்தன்சந்தை மேம்பாலத்தை கடக்க முயன்ற போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
விபத்தில் பேருந்தின் இடது புறம் முழுமையாக சேதமடைந்தது. அரசுப் பேருந்தில் 28 பயணிகள் இருந்தனர். சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். காயமடைந்த 12 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலையில், பார்க்கிங் விளக்குகளை ஒளிர விடாமல் லாரி நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாலேயே விபத்து நடைபெற்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் தட்சினாமூர்த்தி, போலீஸ் எஸ்.பி. செந்தில் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.