திருவள்ளூர் மாவட்டம் குன்ன வலத்தில் டி.டி. மருத்துவக் கல் லூரி தொடங்க கடந்த 2010-ம் ஆண்டில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து 2010-11-ம் கல்வியாண்டில் 150 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. எனினும் அடிப்படை வசதிகள் குறைபாடு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி 2011-12 மற்றும் 2012-13-ம் கல்வியாண்டுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது.
மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்காத நிலையிலும் அந்த இரண்டு ஆண்டுகளிலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களைச் சேர்த்தது. மருத்துவக் கவுன்சில் அனுமதி இல்லாததால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பிரச்னை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 2011-12 மற்றும் 2012-13-ம் ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் கல்வி யாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் அளிக்கப் பட வேண்டும்; அவர்களை எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண் டில் சேர்க்கும் வகையில் தேவை யான கூடுதல் இடங்களுக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட் டிருந்தார்.
இதனை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில், உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது நீதிபதிகள் எம்.ஜெயச்சந்தி ரன், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2011-12 மற்றும் 2012-13-ம் ஆண்டுகளில் டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.
மேலும் இந்த கல்லூரி விவகாரம் தொடர்பான வேறு சில மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள், டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறுவது என 14.10.2013 அன்று இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்த முடிவு சரியே என்று கூறியுள்ளனர்.
எனினும் டி.டி. மருத்துவக் கல்லூரி அறக்கட்டளை அறங்காவலர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்காமல், டி.டி. மருத்துவக் கல்லூரியை கருப்புப் பட்டியலில் வைத்தும், அதன் அறங்காவலர்கள் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க நிரந்தர தடை விதித்தும் மருத்துவக் கவுன்சில் எடுத்த முடிவு செல்லாது என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி அறங்காவலர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்க போதிய வாய்ப்புகளை அளித்து அதன் பிறகே மருத்துவ கவுன்சில் உரிய முடிவினை எடுக்க வேண்டும் என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.