அரசு போக்குவரத்து துறையை மீட்க தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த தேதியை தொழிற்சங்கங்கள் நாளை (14-ம் தேதி) அறிவிக்கவுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே போடப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டபடி ஓய்வூதியர்களுக்கான பி.எப், பணப் பலன்கள், விடுப்புப் பணம் இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றன. எனவே, போக்குவரத்து துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். இதற்கான தேதியை தொழிற்சங்கங்கள் நாளை (14-ம் தேதி) அறிவிக்கவுள்ளன.
இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘போக்குவரத்து துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும், புதியதாக 13-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள் ளோம். இது தொடர்பாக சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உட்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் 14-ம் தேதி (நாளை) கூடி பேசி தேதியை அறிவிக்கவுள்ளனர்’’ என்றார்.