தமிழகம்

பழமையான கட்டிடங்கள்.. மூச்சு திணறும் மக்கள்: பாதுகாப்பற்ற சூழலில் தி.நகர் வர்த்தக உலகம்

எஸ்.சசிதரன்

சென்னையில் பண்டிகை காலம் என்றதுமே தி.நகர்தான் நினைவுக்கு வரும். நகரின் பல பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் இருந்தாலும், தி.நகருக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்வதை ஒரு சுற்றுலாபோல மக்கள் கருதுகின்றனர். இதனால்தான், பண்டிகை காலங்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. மற்ற பண்டிகைகளைவிட, தீபாவளியின்போது தி.நகரே திக்குமுக்காடிப்போகும்.

மிகக் குறுகலான தெருக்கள், சந்துகளில் இந்த வர்த்தக பகுதி அமைந்திருப்பது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. பொதுமக்களுக்கான வசதிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தேவையான அளவுக்கு இல்லை. ரங்கநாதன் தெருவில் உள்ள பல கட்டிடங்களில் தீத் தடுப்பு முன்னெச்சரிக்கை கருவிகள் இல்லை என்று தீயணைப்புத் துறையினரே தெரிவிக்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் அந்த தெருவில் நுழைவது சிரமம்.

கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவில் ரங்க நாதன் தெருவை ஒட்டியுள்ள சந்தில் இருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், அந்த குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க படாதபாடுபட்டனர். பகல் நேரமாக இருந்திருந்தால் விபரீதத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இடிந்துவிழும் நிலையில் உள்ள பழங்கால கட்டிடங்களில்தான் பல வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு விழித்துக் கொள்ளவேண்டும் என்று பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் பேரிடர் விபத்து காலங் களின்போது ஐ.நா. சபையின் ஆலோசகராக செயல்படும் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு ஆலோசகர் வி.ஆர்.ஹரிபாலாஜி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கடந்த 2012-ம் ஆண்டில் சென்னை திரு வல்லிக்கேணியில் 50 ஆண்டு பழமை யான கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பழமையான கட்டிடங் களை அரசு கணக்கெடுத்தது. அவற்றின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அந்த கட்டிடங்களை இடிக்கவோ, பழுது பார்க்கவோ உத்தரவிடப்படும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அது இப்போது எந்த நிலையில் உள்ளது எனத் தெரியவில்லை.

வெளிநாடுகளில் இருப்பதைப்போல், கட்டிட உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் சோதனைகளை வருவாய் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி துறையினர் இணைந்து மேற்கொள்ள வேண்டும். 30 ஆண்டுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு சோதனை கட்டாயம் என்ற விதியை உருவாக்கி, கட்டமைப்பு பொறியாளரின் சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு ஹரிபாலாஜி கூறினார்.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரை தொடர்பு கொண்டபோது, பருவமழை தொடர்பான பணி களில் மும்முரமாக இருப்பதாக கூறினார்.

SCROLL FOR NEXT