மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், பாபநாசம் அணைக்கு நேற்று காலையில் தண்ணீர் வரத்து விநாடிக்கு 1,633 கனஅடியாக அதிகரித்தது. சேர்வலாறு அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்தது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து திருநெல்வேலி மாவட்ட அணைப்பகுதிகளில் மழை பொழிகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத் தில் அதிகபட்சமாக குண்டாறில் 61 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்திலுள்ள அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.):
பாபநாசம்- 6, சேர்வலாறு- 2, அடவிநயினார் கோயில்- 29, கருப்பாநதி- 4, கடனாநதி- 2, ஆய்குடி- 5.3, செங்கோட்டை- 37, தென்காசி- 5.6.
பாபநாசம் அணைக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் விநாடிக்கு 20 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் வந்ததால் நீர்மட்டம் 16 அடியாக குறைந்தது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நீர்வரத்து 444 கன அடியாக இருந்தது. மழை நீடிப்பதால் நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 1633.59 கனஅடியாக அதிகரித் தது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 22.90 அடியாக உயர்ந்தது. அணையிலி ருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 304 கனஅடியி லிருந்து 522.25 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
சேர்வலாறு அணையில் நேற்றுமுன்தினம் 16.40 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 35.10 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 19 அடி உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5 கனஅடி தண்ணீர் வருகிறது.
குற்றாலத்தில் சீஸன் ஜோர்
குற்றாலத்தில் நேற்று முன்தினம் காலையிலி ருந்து பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் கொட்டியது. இந்நிலையில், மலைப்பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் இரவில் ஐந்தருவி மற்றும் பிரதான அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. நேற்று காலை 7 மணியளவில் வெள்ளம் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப் பட்டனர். கோடை விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குற்றாலத்தில் திரண்டதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.