கால்நடைகளுக்கு ஏற்பட்ட கோமாரி நோய் பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விலையில்லா ஆடுகள் வழங்கும் பணி சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் கறவை மாடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகளும், ஆண்டுக்கு 6 லட்சம் ஆடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 30 லட்சம் ஆடுகளும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கறவை மாடுகளும் ஆடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் கோமாரி நோய் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான மாடுகளும், நூற்றுக்கணக்கான ஆடுகளும் இறந்துவிட்டதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் தெரிவித்தார்.
ஆனால், அரசாங்கம் வழங்கிய ஆடுகள் மற்றும் கறவை மாடுகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்ததால் அவை பலியாகவில்லை என கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கோமாரி நோய்த் தாக்குதல் காரணமாக கடந்த நவம்பர் மாதம், விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கோமாரி நோய்த் தாக்குதல் குறைந்துவிட்டதால், மீண்டும் விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கும் பணியைத் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி, விலையில்லா ஆடுகள் வழங்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், கறவை மாடுகள் வழங்கும் பணி தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெறும் ஆட்டுச் சந்தையில் வாங்கி, பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் கோமாரி நோய்த் தாக்குதல் இல்லாததால், கடந்த வாரத்தில் இருந்து உள்ளூர் சந்தையில் ஆடுகளை வாங்கி பயனாளிகளுக்கு கொடுத்து வருகிறோம்.
இந்த ஆண்டு வழங்க வேண்டிய 6 லட்சம் ஆடுகளில், இதுவரை 4,58,000 ஆடுகளை வழங்கிவிட்டோம். மீதமுள்ள ஆடுகள் வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்பட்டுவிடும்.
விலையில்லா கறவை மாடுகளைப் பொருத்தவரை, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு தமிழக அதிகாரிகள் பயனாளிகளை அழைத்துச் சென்று வாங்கித் தருகின்றனர். உள்ளூர் சந்தையில் கறவை மாடுகள் வாங்கப்படுவதில்லை. கோமாரி நோய்த் தாக்குதல் தமிழ்நாட்டில் இல்லை. அதுபோல கர்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் கோமாரி நோய்த் தாக்குதல் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கால்நடைத் துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்குச் சென்றுள்ளது.
அந்தக் குழுவினர், அந்த மாநிலங்களில் உள்ள மாட்டுச் சந்தைகளில் மட்டுமல்லாமல், அருகில் உள்ள கிராமங்களிலும் கோமாரி நோய்த் தாக்குதல் உள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்வார்கள். அவர்கள் கொடுக்கும் ஆய்வறிக்கை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதன்பிறகு முதல்வரின் அறிவுறுத்தல்படி, விலையில்லா கறவை மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் இருந்து மாடுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கும் என்றார்.