தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அரசு மருத்துவர்கள் பணிக்கான தேர்வு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த அரசு மருத்துவர்கள் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள 1,223 உதவி அறுவைச் சிகிச்ச்சை டாக்டர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 22-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்க இருந்தது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் நடத்தி வருகின்றனர். இதனால் விண்ணப்பித்து இருந்த டாக்டர்கள் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தேர்வை ஒத்தி வைக்கக்கோரி விண்ணப்பித்திருந்த டாக்டர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு கடிதம், இமெயில், எஸ்எம்எஸ் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT