பொதுத்துறை வங்கிகளை இணைக்கக் கூடாது, தனியார்மயம் செய்தல் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 22-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
வங்கி சங்கங்களின் கூட் டமைப்பு கூட்டம் நேற்று மும்பை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமீபகாலமாக மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வரும் மக்கள் விரோத, பொதுத்துறை விரோத நடவடிக்கைகள் பற்றி விவாதிக் கப்பட்டது. இக்கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தீர்மானிக் கப்பட்டது.
இதன்படி, மத்திய அரசின் நிதித் தீர்வு மற்றும் வைப்பு காப்பீடு-2017 மசோதாவைக் கைவிட வேண்டும். பொதுத்துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்கக் கூடாது. பெரு நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். வசதி இருந்தும் திருப்பிக் கட்டாத கடனாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிக் கிளைகளை மூடக் கூடாது. வங்கிப் பணிகளை வெளியாட்களுக்கு விடக் கூடாது. ஜிஎஸ்டியில் வங்கி சேவைகளுக்கு 15 சதவீத வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். கூடுதல் பணியார்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி ஒருநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.