தமிழகத்தை மின்மிகை மாநிலம் என்கிறார்கள். ஆனால், மின் இணைப்புக்காக விண்ணப்பித்த சுமார் நான்கரை லட்சம் விவசாயிகளை ஆண்டுக்கணக்கில் காக்க வைத்திருக் கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தில் இப்போது கடும் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியானது விவசாயிகளை நூற்றுக்கணக்கில் காவு கொண்டு விட்ட நிலையில், நிவாரணம் கேட்டு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீர் நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டதால் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கும் 80 சதவீத விவசாயிகளுக்கு கட்டாயமாக மின் இணைப்பு தேவை. இதை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.
4,28,767 பேர் காத்திருப்பு
கடந்த 2016, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 4,28,767 விவசாயிகள் மின் இணைப்புக்கேட்டு விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள். இவர்களில் பாதிப் பேர் சுயநிதி திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியவர்கள். இதில், 2000-ம் ஆண்டுக்கு முன்பே பதிவு செய்தவர்கள் 2,03,357 பேர். இதில், சுய நிதித் திட்டம் - ரூ.50,000 முன் னுரிமைப் பிரிவில் பணம் செலுத்தி காத்திருப்போர் 1,05,082 பேர், ரூ.25,000 முன்னுரிமைப் பிரிவில் பணம் செலுத்தி காத்திருப்போர் 80,481 பேர்.
அதேசமயம், ஏற்கெனவே அளிக்கப் பட்ட விவசாய மின் இணைப்புகளிலும் ஏராளமான குளறுபடிகள். இதுகுறித்துப் பேசும் விவசாயிகள், “கடந்த 2015-16-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 20 லட்சத்து 62 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், விவசாயம் படிப்படியாக பொய்த்து வருவதால் கடந்த பத்து ஆண்டுகளில் இவர்களில் பாதிப்பேர் விவசாயத்தை கைவிட்டுவிட்டனர்.
முறைகேடாக பயன்படுத்துகின்றனர்
இதனால், நகரங்களை ஒட்டி இருக்கும் பலரும் விவசாயத்துக்காக பெறப்பட்ட மின் இணைப்பை முறைகே டாகப் பயன்படுத்துகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் புறநகர் பகுதிகளில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் விவசாய இணைப்புகள் இருக் கின்றன. இவர்களில் கணிசமானோர் விவசாய மின் இணைப்பு மூலம் 20 ஹெச்.பி. மோட்டார் வரை பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் நிறுவனங்களுக்கு விற்கிறார்கள்.
எனவே, அரசாங்கம் தீவிர ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் அல்லாதவர்களின் மின் இணைப்பை ரத்து செய்தாலே காத்திருக்கும் உண்மை யான விவசாயிகளில் பாதிப் பேருக்காவது உடனடியாக மின் இணைப்பை வழங்க முடியும்.” என்கிறார்கள்.
ஒத்துழைப்பு இல்லாததால்..
இதுகுறித்து மின்வாரியம் தரப்பில் பேசிய அதிகாரி ஒருவர், “மேற்கண்ட சிக்கலைத் தீர்க்க 2014-ல் அதிகாரிகள் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. அப்போது, புதிய மின் கட்டண விகிதங்கள் திட்டமிடப்பட்டபோது, ‘மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயி கள் மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண விகிதத்தில் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.30 செலுத்த வேண்டும், கம்பம், மின் கம்பி, மீட்டர் பெட்டி ஆகியவற்றை அவர்களே சொந்த செலவில் வைத்துக்கொள்ள வேண்டும். சீனியாரிட்டி வரும் தேதியிலிருந்து அவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என்ற திட்டத்தை அறிவித்தோம். ஆனால், சிலரது ஒத்துழைப்பு இல்லாததால் இத்திட்டம் வெற்றி பெறவில்லை.
கடந்த 2015-ல், நிலுவையில் இருந்த நான்கரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு அளிக்க சுமார் 1,700 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிட்டோம். இதை மின்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தோம். அவர்களோ, பொத்தாம் பொதுவாக சுமார் 16,000 கோடி ரூபாய் செலவாகும் என்று அறிவித்தார்கள். அதாவது ஒவ்வொரு மின் இணைப்புக்கும் தலா ஒரு மின் கம்பம், கூடுதலான மின் கம்பிகள், கூடுதலான ஒப்பந்தத்தொகை என கணக்கிட்டு இந்தத் தொகையை நிர்ணயித்தார் கள். இதில், விவசாயிகளுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதைவிட ஒப்பந்த தாரர்கள் வளம்கொழிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது” என்றார்.
அமைச்சர் என்ன சொல்கிறார்?
தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணியிடம் விவசாயத்துக்கான புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்து கேட்டோம். “சீனியாரிட்டி அடிப்படையில் இலவச மின்சாரம் மற்றும் சுயநிதி முன்னுரிமை பிரிவுகளில் பதிவு செய்த விவசாயிகளுக்கு படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மின் சார இருப்பு, மின் செலவை பொறுத்து இலவச மின்சார இணைப்பு உட்பட ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான விவசாய மின் இணைப்புகள் மட்டுமே வழங்க முடிகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு கடும் நெருக்கடியிலும் 12,625 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. 2017-ம் ஆண்டு 40,000 விவசாய மின் இணைப்பு கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநேரத் தில், தமிழக அரசு இலவச மின்சாரத்துக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.4000 கோடி வரை மின்வாரியத் துக்கு செலுத்தி வருவதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்றாலும், விரைவில் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும்” என்றார்.
இலவச மின்சாரக் கணக்கீட்டிலும் குளறுபடி!
தமிழக மின்வாரியத்தின் இலவச மின்சார கணக்கீடே குளறுபடியாக இருக்கிறது என்று சொல்லும் மின்வாரிய ஆடிட்டர்கள், “தமிழகத்தில், வீட்டு பயன்பாடு மற்றும் வணிக ரீதியிலான மின் இணைப்புகளுக்கு மீட்டர் கணக்கீடு உள்ளது. ஆனால், இலவச மின்சாரத்துக்கு மீட்டர் கணக்கீடு கிடையாது. வீட்டுப் பயன்பாட்டு மின் செலவு, வணிகப் பயன்பாட்டு மின் செலவு இவற்றோடு பகிர்மான மின் இழப்பு சுமார் 15 சதவீதம் சேர்த்துக் கணக்கிடுகிறார்கள். இதுபோக, நுகர்வாகும் மின்சாரம் அனைத்துமே இலவச மின்சாரமாக கணக்கிடப்பட்டு அதற்கான தொகையை தமிழக அரசிடம் மின் வாரியம் பெற்றுக்கொள்கிறது. அந்தவகையில், அரசியல் கட்சிகள் கொக்கி போட்டுத் திருடுவது உள்ளிட்ட முறைகேடாகப் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சாரமும் விவசாயத்துக்கான இலவச மின்சார கணக்கில் தந்திரமாக திணிக்கப்படுகிறது” என்கின்றனர்.