தமிழகம்

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் விசேஷ நாட்களில் கூடுதல் கட்டணம்: ‘உங்கள் குரல்’ சேவையில் வாசகர் புகார்

செய்திப்பிரிவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி லில் விசேஷ நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ‘தி இந்து - உங்கள் குரல்’ சேவையில் வாசகர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி சேவையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாசகர் எஸ்.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நான் அடிக்கடி செல்வேன். சமீபகாலமாகவே, வணிக நோக்கிலான செயல்களில் கோயில் நிர்வாகம் அதிகம் ஈடுபட்டு வருகிறது. வழக்கமாக பிரதோஷம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் சிறப்பு தரிசனத்துக்கு ரூ.20 வசூலிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. நான் குடும்பத்துடன் சென்றிருந்த தால், 6 பேருக்கு மொத்தம் ரூ.300 கட் டணம் செலுத்த வேண்டியிருந்தது.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கோயில் நிர்வாகம் இப்படி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்தர்கள் மன நிம்மதிக்காகத்தான் கோயிலுக்கு செல்கின்றனர். ஆனால், அங்கு பணம் சம்பாதிக்கும் வணிக நோக்கத்துடன் நடந்துகொள்வது அறநிலையத் துறைக்கு அழகல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மயிலாப்பூர் கோயில் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘கோயில் களில் சிறப்பு தரிசனத்துக்கான கட்டணம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. அதை அறநிலையத் துறை ஆணையகம் தற்போது மாற்றி அமைத்துள்ளது. அதன்படிதான் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோயிலில் மட்டுமல்லாது, அனைத்து கோயில்களிலும் கடந்த 10 நாட்களாக ரூ.50 கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT