தமிழகம்

மருத்துவ சமூகத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையில் ஜெ. சிகிச்சையை அரசியலாக்கக் கூடாது: இந்திய மருத்துவக் கழகம்

செய்திப்பிரிவு

மருத்துவ சமூகத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையில் ஜெ. சிகிச்சையை அரசியலாக்கக் கூடாது என இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ கழகத்தின் (ஐஎம்ஏ) மாநிலத் தலைவர் டாக்டர் டி.என்.ரவிசங்கர், தேசிய துணைத்தலைவர் டாக்டர் கே.பிரகாசம், கவுரவ மாநில செயலாளர் டாக்டர் என்.முத்துராஜன் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரியான சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றித்தான் சிகிச்சை அளித்துள்ளது. தேவையற்ற வதந்திகளால் மருத்துவ சமூகமே மனஉளைச்சல் அடைந்துள்ளது.

மருத்துவ விதிமுறைகள்படி தனிப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கட்டாயம் ரகசியம் காக்கப்பட வேண்டும். அதுதான் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நடைமுறைகளிலும் கடை பிடிக்கப்பட்டுள்ளது.

உயர் தர மருத்துவ சிகிச்சையில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது. குறிப்பாக சென்னை மருத்துவ சுற்றுலாவில் சிறந்து விளங்குகிறது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் புகழ்பெற்ற மருத்துவர்கள் ஜெயலலிதாவின் சிகிச்சையில் பங்கெடுத்துள்ளனர். எனவே மருத்துவ சமூகத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையில் இதை அரசியலாக்கக் கூடாது'' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT