தமிழகம்

வடபழனி தீ விபத்தில் காயமடைந்த 8 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை வடபழனி தீ விபத்தில் காயமடைந்த 8 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி தெரிவித்தார்.

சென்னை வடபழனி பெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி. இவரது மகள் செல்வி. செல்வியின் பேரன் சஞ்சய், பேத்தி சந்தியா ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த ஐயப்பன் (19), மார்டின் (24), தங்கம் (22), ஆண்டனி (14) மற்றும் லேசான காயமடைந்த பச்சையம்மாள் (60), விஜயலட்சுமி (41), ஸ்ரீதர் (60) தீனதயாளன் (33) ஆகியோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயங்கள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக ஐயப்பனுக்கு மட்டும் 54 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்

தது. இவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு வந்த நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் உயிரிழந்த 4 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம், காயமடைந்த 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்த 4 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், ஜெ.ஜெயவர்த்தன், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் சத்யநாராயணன், மருத்துவமனை டீன் வசந்தாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

தீக்காயம் அடைந்தவர்களின் உடல்நிலை பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வசந்தாமணி கூறும்போது, “தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அனைவரும் நலமாக உள்ளது. 54 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட ஐயப்பனின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்றார்.

வெளியேற உத்தரவு?

இதனிடையே விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் அனைவரும் வெளியேறும்படி மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அனைவரும் கிளம்பி வேறு இடத்துக்கு சென்றனர். இதற்கிடையில், அடுக்குமாடி உரிமையாளரும் அதிமுக பிரமுகருமான விஜயகுமார் என்பவரை வடபழனி போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT