திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட மூத்த இலக்கிய திறனாய வாளர் தி.க. சிவசங்கரன் (89), உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவரது உடலுக்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
விருதுநகர் தொகுதியில் பிரச்சாரத் தில் ஈடுபட்டிருக்கும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, புதன்கிழமை நண்பகல் திருநெல்வேலி வந்து அஞ்சலி செலுத்தி, தி.க.சி. குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
வைகோ கூறியதாவது:
ரசிகமணி டி.கே.சி.யை தந்த திருநெல்வேலி மாவட்டம், இலக்கியச் சுடரொளி தி.க.சி.யை தந்தது. சமதர்ம சிந்தனையாளர், ஈழ விடுதலை வேட்கையாளர், இலக்கிய விமர்சகர், மொழி பெயர்ப்பு நூல்கள் வழங்கிய படைப்பாளி, கார்ல் மார்க்ஸ், லெனின் வழியில் வந்த தி.க.சி. தமிழ் ஈழ விடுதலைக்கு தன் எழுத்தையும், பேச் சையும் அர்ப்பணித்தவராக வாழ்ந்தார்.
பாலச்சந்திரன் கொலை செய்யப் பட்ட செய்தியால் நெருப்பாக கொதித்த தி.க.சி. கல்லூரி மாணவர் களின் போராட்டக் களங்களுக் கெல்லாம் சென்று உணர்ச்சிமிக்க உரையாற்றியவர். இன்னும் 5 ஆண்டுகள் அவர் இருப்பார் என்ற ஆவல் இருந்தது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை பார்த்திருப்பார், என்றார் வைகோ.
ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.எம்.ஏ. நிஜாம், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். பெருமாள், ம.தி.மு.க. பிரமுகர்கள் குட்டி என்ற சண்முகசுந்தரம், முகமது அலி, வரலாற்று ஆய்வாளர் செ. திவான் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண் டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுபோல், தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. மைதீன்கான், பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர்
அ. வியனரசு, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி மற்றும் தமிழ்செல்வன், நாறும்பூ நாதன், கிருஷி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் தி.க.சி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை 4 மணிக்கு திருநெல்வேலி கருப்பந்துறை மயானத்தில் நடை பெறுகிறது.
டைரி குறிப்பு புத்தகமானது
தி.க.சி.யின் 90-வது பிறந்த நாள் விழாவை திருநெல்வேலியில் வரும் சனிக்கிழமை (மார்ச் 30-ம் தேதி) நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த விழாவில் தி.க.சி-யின் நாட்குறிப்புகள் என்ற புத்தகம் வெளியிடப்பட இருந்தது. அவர் தனது 23-வது வயதிலிருந்து எழுதிய டைரி குறிப்புகளை தொகுத்து புத்தகமாக உருவாக்கியிருந்தனர். அந்த புத்தகத்தின் முதல் அச்சுப் பதிப்பையும் தி.க.சி. படித்து பார்த்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். ஆனால், பிறந்த நாள் விழாவுக்கு முன் அவர் காலமானது குறித்து அவரது அடிச்சுவட்டை பின்பற்றும் எழுத்தாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.