மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்னணு சாதனங்களின் வருகை மட்டுமின்றி அவை பல்வேறு நவீன வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் எதிரொலியாக பழமை மாறாத அம்மி, ஆட்டுக்கல் ஆகியவற்றின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதுடன், அத்தொழிலில் ஈடுபட்டு வந்த மக்கள் மாற்றுத் தொழில் நாடிச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டி, கொண்டம் பட்டி, நைனாமலை அடிவாரம், ராசிபுரம் பகுதிகளில் அம்மிகல், ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நேரடியாக வும், மறைமுகமாகவும் ஏராளமா னோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இங்கு தயார் செய்யப்படும் அம்மி, ஆட்டுக்கல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள வாரச் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
ஆட்டுக்கல் ஆயிரம் ரூபாய்
அளவுக்கு ஏற்ப அம்மிக்கல் ரூ.250 முதல் ரூ.600 வரையும், ஆட்டுக்கல் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அம்மி, ஆட்டுக்கல் நேர்த்தியான முறையில் வடிவமைப்பதால், இவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
ஆனால், நவீனக் கருவிகளின் வருகையால், அம்மி, ஆட்டுக்கல்லுக்கான வரவேற்பு குறைந்து விட்டது. மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரத் துவங்கின. அவை தற்போது பல மாற்றங்களைக் கண்டு, அனைத்து தரப்பு மக்களும் எளிதில் பயன்படுத்தும் அளவிற்கு வளர்ச்சிக் கண்டுள்ளது. இதனால், அம்மி, ஆட்டுக் கல்லின் விற்பனை சரியத் துவங்கியது. இத்தொழிலில் ஈடுபட்டவர்கள், மாற்றுத் தொழில் நாடிச் செல்லும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கூலிப்பட்டியை சேர்ந்த அம்மி, ஆட்டுக் கல் தயாரிப்பாளர் எ.மாரிமுத்து கூறியது:
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அம்மி, ஆட்டுக்கல் தயாரிக்க கருங்கற்கள் கொண்டு வரப்படுகிறது. 12 அங்குலம் முதல் 20 அங்குலம் வரை அம்மி, ஆட்டுக்கல் தயாரிக்கப்படுகிறது. அதன் அளவிற்கு தகுந்தாற் போல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
மாற்றுப்பணிக்கு சென்ற தொழிலாளர்கள்
ஆனால், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்னனு இயந்திரங்களின் வருகையால், அம்மி, ஆட்டுக்கல்லின் விற்பனை பெரிதும் சரிந்து விட்டது. தொழில் வாய்ப்பு குறைந்ததால் பலர் விவசாய கூலி போன்ற மாற்றுப் பணிக்கு சென்று வருகின்றனர்.
இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு கூலித்தொகை தான் மிஞ்சுகிறது. வேறு லாபம் எதுவும் இல்லை. எனினும், மாற்றங்களைத் தடுக்க முடியாது. ஆலைகளில் இயந்திரம் மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுவதால், அவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பெரிய அளவிலான செக்கு உற்பத்தி எங்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.