தமிழகம்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் மீண்டும் பற்றிய தீ: 3-வது நாளாக இடிக்கும் பணிகள் தொடர்கின்றன

செய்திப்பிரிவு

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று மீண்டும் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர். இன்று 3-வது நாளாக கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடர்கின்றன.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் கடந்த புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜவுளி பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. தரைதளத்தில் உள்ள நகைக்கடையில் 400 கிலோ தங்க நகை மற்றும் ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் சிக்கியுள்ளன. இவற்றை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையில், சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. ராட்சத இயந்திரம் மூலம் மேலிருந்து கீழ் நோக்கி கட்டிடம் இடிக்கப்பட்டு வருகி றது. கட்டிட இடிபாடுகள் லாரிகள் மூலம் உடனுக்குடன் அப்புறப்படுத் தப்படுகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் நேற்று 4-வது நாளாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் கட்டிடத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று கட்டிடத்தில் மீண்டும் திடீர் தீப்பற்றி எரிந்தது. தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடத்தை இடிக்கும் பணிகள் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், சேதமடைந்த பொருட்களின் மதிப்பை தெரிந்து கொள்வதற்காக காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் நேற்று காலை வந்தனர். கட்டிடம் அபாய கரமாக உள்ளதால் அதற்குள் செல்ல காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

SCROLL FOR NEXT