கச்சத்தீவை மீட்க கோரி திமுக தலைவர் மு.கருணாநிதி அளித்த மனுவின் மீது பதில் அளிக்க, மத்திய அரசுக்கு மேலும் நான்கு வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகளான பி.எஸ்.சௌகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, நான்கு வார காலம் அவகாசம் கேட்டார். இதை ஏற்ற நீதிபதிகள் அவகாசம் வழங்கி, வழக்கை நான்கு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.
ஏற்கனவே, இந்த வழக்கு கடந்த மாதம் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு பதில் கேட்டு அனுப்பப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு கால தாமதம் ஆனதாகவும், இதற்காக எட்டு வார கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஆறு வார காலத்திற்கு ஒத்தி வைப்பதாகவும் அதற்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இலங்கை அரசின் வசம் கச்சத்தீவு இருப்பதால் தமிழக மீனவர்கள் அதிகமாக கொல்லப்படுவதாகவும், கைது செய்யப்படுவதாகவும் கருணாநிதி கூறியிருந்தார்.
மேலும், இதை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட போது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதால் அந்த ஒப்பந்தம் செல்லாது எனவும் குறிப்பிட்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.