குடிநீர் வாரிய குழாய்களில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் சம்மந்தப்பட்ட வீடுகளின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குடிநீர் வாரிய குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை சிலர் மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவதாக வந்த புகார்களை அடுத்து, புகார் தெரிவிக்கப் பட்ட பகுதிகளில் சோதனை யிடுமாறு, வாரிய பொறி யாளர்களுக்கு வாரியத்தின் மேலாண் இயக்குநர் அருண் ராய் அறிவுறுத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, குடிநீர் வாரிய அதிகாரிகள், வில்லிவாக்கத்தில் நேற்று சோதனை மேற்கொண்டபோது, பஜனை கோயில் முதல் தெருவிலுள்ள 3 வீடுகளில் குடிநீர் வாரிய குழாயிலிருந்து நேரடியாக குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வீடுகளின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுபோன்ற முறைகேடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டால், சம்மந்தப்பட்ட வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படு வதோடு, அவர்கள் மறு இணைப்பு பெறுவதற்கு, அபராத தொகையாக ரூ.10 ஆயிரமும், மறு இணைப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 500-ம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.