சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, மாணவிகளுடன் கலந்துரையாடினார். கல்வி, பெண் பாதுகாப்பு, பாராளுமன்றம், சர்வதேச விவகாரம், லஞ்ச ஒழிப்பு, அமெரிக்காவின் செயல்பாடுகள், உணவு பாதுகாப்பு, சமூகநல திட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மாணவிகள் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்க, சற்றும் சளைக்காமல் அவற்றுக்கு பதில் அளித்தார் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி.
“சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு சட்ட மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டோம். இன்னும் பெண்களால் சாலையில் தனியாக பாதுகாப்புடன் நடந்து செல்ல முடியவில்லையே?” என அரசியல் அறிவியல் படிக்கும் மாணவி ரஞ்சனா கேட்டார்.
அதற்கு ஹமீது அன்சாரி பதில் அளிக்கையில், “ஆண்கள் பெண்களை சக மனுஷியாக எண்ண வேண்டும். அதுவரை இதுபோன்ற பாதுகாப்பின்மை பிரச்சினை தொடரத்தான் செய்யும். இதற்கு தீர்வு காணவேண்டியது ஒட்டுமொத்த சமூகப் பொறுப்பு” என்றார்.
“பாராளுமன்ற ஜனநாயகம் தரம் தாழ்ந்து வருகிறதே” என்ற கேள்வியை முன்வைத்தார் மாணவி ரேஷ்மா. அதற்கு பதில் அளித்த குடியரசு துணைத்தலைவர், “பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர் வமான விவாதம் நடக்க வேண்டுமே ஒழிய கூச்சலும், அமளியும் நடக்கக்கூடாது. ஆனால், விவாதம் செய்ய சத்தமிடுவதை பலரும் விரும்புகிறார்கள். இதற்கு உறுப்பினர்கள் மட்டுமல்ல அவர்களை தேர்வுசெய்த மக்களும் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.
“குடியரசு துணைத்தலைவர் பதவி சவால் நிறைந்ததா ராஜ்யசபா தலைவர் பதவி சவால்மிக்கதா?” என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அன்சாரி, “ஒவ்வொரு பதவியும் ஒவ்வொரு விதத்தில் சவால்நிறைந்ததாக இருக்கும். எனவே, பதவிகளைப் பிரித்துப்பார்க்க முடியாது” என்றார்.
“பாராளுமன்றத்தில் நீங்கள் சந்தித்த இக்கட்டான சூழல் எது?” என்று ஒரு மாணவி கேள்வி கேட்டார். ” ஒருமுறை ஒரு சட்ட மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தபோது மின்னணு சாதனம் பழுதாகிவிட்டது. வாக்கெடுப்பு மீதான முடிவை அறிவிக்க சிரமமாக இருந்தது” என்றார் அன்சாரி. மேலும் லஞ்ச ஒழிப்பு, நாட்டின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு அன்சாரி சுவைபட பதிலளித்தார்.