தமிழகம்

ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும்: சட்டசபை செயலாளருக்கு திமுக கோரிக்கை

செய்திப்பிரிவு

ஜெயலலிதா எம்எல்ஏ பதவியை இழந்ததால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று சட்டசபை செயலாளருக்கு திமுக மனு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தென்சென்னை மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், தமிழக சட்டசபை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, முதல்வராகவும் எம்எல்ஏவாகவும் இருக்க ஜெயலலிதா தகுதியிழந்து விட்டார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் அழைப்பின்பேரில், புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும், ஜெயலலிதா மீதான தீர்ப்பை தாங்கள் அங்கீகரித்ததாக தெரியவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுகள்படி, குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளி தகுதியிழப்பு செய்யப்படுவார். அதன்படி, ரங்கம் சட்டசபைத் தொகுதி தானாகவே காலியிடமாகிறது.

அதேநேரம், ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வேண்டியது சட்டசபை செயலாளரின் கடமை யாகும். தற்போது சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எந்தவித மான தடையும் மேல் நீதிமன் றங்களால் வழங்கப்படவில்லை. ஜாமீன் மனுவும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக தாங்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும், சட்டசபை வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு மனு

திமுக எம்.எல்.ஏ., அன்பழகன் சார்பில், தமிழக அரசின் அனைத்து துறை செயலர்கள், போலீஸ் டிஜிபி, உள்ளாட்சித் துறை உயரதிகாரிகளுக்கு மற்றொரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ள நிலையில், வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெ.ஜெயலலிதாவின் படங்களை, அரசுத் துறை திட்டங்கள், அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பான அறிவிப்புகளிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். அம்மா உணவகம், உப்பு, தேயிலை, தண்ணீர் பாட்டில் என அனைத்திலிருந்தும் உடனடியாக படங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்,’எனக் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகள்படி, குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டால் அவர் தகுதியிழப்பு செய்யப் படுவார். அதன்படி, ரங்கம் தொகுதி தானாகவே காலியிடமாகிறது

SCROLL FOR NEXT