கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குடிசை அமைத்து, தங்களது குழந்தைகளுடன் பிளாஸ்டிக் உள்ளிட்ட சிறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசூர் பேருந்து நிலையத்தில் 2 இளம் பெண்கள் ஒரு சிறுமியுடன் பிளாஸ்டிக் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பணியில் இருந்து போலீஸ்காரர் ஒருவர், அவர்களை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, பெண்களிடமும், சிறுமியிடமும் தவறாக நடக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களை கடுமையாக தாக்கியதுடன், பணத்தையும் பறித்தாகத் தெரிகிறது. தமிழ் மொழி தெரியாத காரணத்தால் யாரிடம் சொல்வது என தெரியாமல் பெண்கள் பேருந்து நிலையத்தில் காயங்களுடன் சுற்றித் திரிந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை குறித்து, ஓசூர் சார் ஆட்சியர் பிரவீன் பி. நாயருக்கு தகவல் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணம்மாள், ஓசூர் ஏஎஸ்பி ரோகினி பிரியதர்ஷினி மற்றும் போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்கள், சம்பந்தப்பட்ட போலீஸிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து ஓசூர் சார் ஆட்சியர் பிரவீன்.பி.நாயர் “தி இந்து”விடம் கூறும்போது, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து, அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளோம். நாளை (இன்று) விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.