தமிழகத்தில் நிச்சயமாக காமராஜர் ஆட்சியை அமைப்போம் என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை நிலவியது.
சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை மானிய கோரிக்கையின் மீது நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமார் பேசும்போது, ‘‘கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் இருவரும் (அதிமுக, திமுக) தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறீர்கள். கடந்த 1967-ம் ஆண்டு நாங்கள் விட்ட ஆட்சியை, மீண்டும் பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். நிச்சயம் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்’’ என்றார்.
அப்போது பேசிய மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, ‘‘காங்கிரஸ் தற்போதுள்ள கூட்டணியில் இருந்து விலகி, தனித்து நின்று ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்யலாம்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த ஹெச்.வசந்தகுமார், ‘‘காலம் பதில் சொல்லும்’’ என்றதும் அவையில் சிரிப்பலை நிலவியது.