தமிழகம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: இயக்குநர் கவுதமன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக விவசாயிகளைப் பாது காக்க மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கவுதமன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

தஞ்சையில் விளைந்தால் தரணிக்கே சோறிடலாம் என்பது முதுமொழி. இன்று தஞ்சையில் குடிக்க கஞ்சிகூட இல்லாமல் கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட 200 விவசாயிகள் தூக்கில் தொங்கியும், மாரடைப்பு வந்தும் இறந்துள்ளனர். ஆனபோதிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து, நம் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலைத் தடுத்து, நமது கலை, கலாச்சாரம், பண்பாடு, வீரம், விவசாயம், வரலாறு என அனைத்தையும் மத்திய அரசு அழிக்கிறது. இதைக் கண்டித்து அனைவரும் போராட வேண்டும். இறந்த விவசாயிகள் பட்டியலை தமிழக அரசு தர வில்லை என்று மத்திய அரசு கூறுவது ஏற்புடையது அல்ல.

தமிழையும் தமிழனையும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் போற்றிக் கொண்டாடும் நிலையில், இந்திய அரசு மட்டும் நசுக்கிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். மாடுபிடி விளை யாட்டில் பங்கேற்க 14, 15, 16 தேதி களில் மாணவர்கள், இளைஞர்கள் மதுரை மண்ணுக்கு கூட்டம் கூட்டமாகப் படையெடுப்போம்.

திரையுலகம் ஆதரவு

ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டில் நடத்த தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பல்வேறு தரப் பிலும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரு கின்றனர். கமல், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரி வித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் தனுஷ், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளத்தில் ஒருங்கிணைந்த அம்சம். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். நமக்கு ஜல்லிக்கட்டு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு.. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து உருவாக்கிய பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான புகைப்படத்தை ட்விட்டர் தளத்தில் தங்களுடைய முகப்பு படமாக வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT