தமிழகத்தில் பெய்து வரும் கன மழை மேலும் 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 48 மணி நேரத்துக்கு முன்பு உருவான காற்று மேல் அடுக்கு சுழற்சி அதே இடத்தில் நிலவி வருகிறது. மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தமிழகத்தின் கிழக்கு திசையில் காற்று மேல் அடுக்கு சுழற்சியும், மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதியும் இருப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துரை, சென்னை நுங்கம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் ஆகிய இடங்களில் 8 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, புழல், திருவள்ளூர், சோழவரம், சென்னை டிஜிபி அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகம், உள்ளிட்ட இடங்களில் 7 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், மாதவரம், எண்ணூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 294.8 மி.மீ. மழை பெய்தது. இது சராசரியான 440 மி.மீ. மழை அளவைவிட 33 சதவீதம் குறைவாகும். இது கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த மழையாகும். ஆனால், இந்த ஆண்டு பருவ மழை தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 126.1 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரி மழையைவிட 31% அதிகமாகும். எனவே, தமிழகத்தில் பருவ மழை இந்த ஆண்டு சராசரியாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.