சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தனூர்பட்டி திமுக ஊராட்சித் தலைவரின் ஜீப்பில் பைப் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தனூர் பட்டி ஊராட்சித் தலைவராக திருமுருக வீரபாண்டியன் இருந்து வருகிறார். திமுக பிரமுகரான இவருக்கு சொந்தமான ‘ஜீப்’பை சர்வீஸ் செய்ய சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சர்வீஸ் ஸ்டேஷனில் விட்டிருந்தார்.
ஜீப்பை கழுவ பணியாளர்கள் ஹைட்ராலிக் மூலம் ஜீப்பை மேலே தூக்கி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். அப்போது, ஜீப்பின் அடிப்பகுதியில் ‘பைப்’ வெடி குண்டு பொருத்தப்பட்டிருப்பதை கண்டு, ஊழியர்கள் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்தனர். இதுகுறித்து பணியாளர்கள் அஸ்தம்பட்டி போலீஸில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்தில் போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், முன் விரோதம் காரணமாக பைப் வெடி குண்டை யாராவது பொருத்தினார்களா? அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். க்யூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.