தமிழகம்

காவல்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்: முதல்வர் பதிலளித்து பேசுகிறார்

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்பில் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை சட்டப்பேரவையில் இன்று நடக்கிறது. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்கள் தர்ணா போன்றவற்றில் ஈடுபடாமல் தடுக்க பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நடவடிக்கை களுக்கு குந்தகம் விளைவித்ததாக திமுக உறுப்பினர்கள் 79 பேர் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் பி.தனபால் கடந்த 17-ம் தேதி அறிவித்தார். தலை மைச் செயலக வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் 19-ம் தேதி போட்டி சட்டசபைக் கூட்டம் நடத்தினர். தலைமைச் செயலகத் துக்குள் அனுமதியின்றி கூடிய தாகவும், உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ‘‘முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள காவல்துறையின் மானியக் கோரிக்கை மீது 22-ம் தேதி விவாதம் நடக்கும்போது எதிர்க் கட்சி உறுப்பினர்கள் யாரும் இருக் கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்று ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில், தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடக்கிறது. உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசுவார். இதை யொட்டி, தலைமைச் செயலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடை யாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே தற்போது தலைமைச் செயலகத்துக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். அடையாள அட்டை வைத்திருப்போரைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக் கக்கூடாது என்று போலீஸாருக்கு காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தர்ணா, போட்டி சட்டசபைக் கூட்டம் போன்ற செயல்களில் திமுக உறுப்பினர்கள் ஈடுபடாதவாறு கண்காணிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற் காக, தலைமைச் செயலக நுழைவுவாயில்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

வழக்கமாக, பேரவை தொடங்கி முதல் ஒரு மணி நேரம் நடக்கும் கேள்வி நேரம் இன்று கிடையாது. பேரவை தொடங்கியதுமே, காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT