தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனை பிடிக்க முடியாமல் 13 நாட்களாக கொல்கத்தா போலீஸார் திணறி வருகின்றனர்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கவுல் உட்பட பல்வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது.
தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோ ருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தர விட்டார்.
இந்நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர் மற்றும் 6 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி கர்ணன் கடந்த 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் 9-ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, 9-ம் தேதி காலை சென்னை வந்த நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அவரை கைது செய்வதற்காக மேற்கு வங்க டிஜிபி சுரஜித்கர் புர்கயஷா தலைமையிலான தனிப் படை போலீஸார், 10-ம் தேதி காலை விமானத்தில் சென்னை வந்தனர். தன்னை கைது செய்வதற்காக தனிப்படை வருவதை அறிந்த நீதிபதி கர்ணன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் காரில் 9-ம் தேதி நள்ளிரவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளி கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அவர் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி, தடா ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொல்கத்தா போலீஸாருடன் இணைந்து தமிழக போலீஸாரும் ஆந்திரா சென்று தேடினர். ஆனால், கர்ணனை பிடிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவர்கள் சென்னைக்கே திரும்பிவிட்டனர்.
சென்னை சூளைமேடு சவு ராஷ்டிரா நகர் முதல் தெருவில் உள்ள நீதிபதி கர்ணனின் மகன் சுகன் (37) வீட்டில் கொல்கத்தா போலீஸார் சோதனை நடத்தினர். கர்ணன் தலைமறைவாக இருக் கும் இடம் குறித்து சுகன் மற்றும் அவரது கார் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தினர். நீதிபதி கர்ணனின் உறவினர்கள், நண்பர் கள் சென்னையில் நிறைய பேர் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் வீட்டில்தான் அவர் தலைமறைவாக இருக்கக்கூடும் என்று போலீஸார் சந்தேகிக் கின்றனர். இதனால், தமிழக போலீஸாரின் உதவியுடன் சென்னை முழுவதும் கொல்கத்தா போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கடந்த 13 நாட்களாக சென்னையில் பல இடங்களில் தேடியும் கர்ணனை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். எனினும் கர்ணனின் உறவினர்கள், நண்பர்களின் வீடு களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருடன் இருந்த மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.